Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 செப்டம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டில் வலசு ஊராட்சி, புது வெள்ளியம் பாளையம் கிராமத்தில் முறையான மயானம் / எரியூட்டு இடம் இல்லாததால், பொதுச்சாலையோரத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட மற்றும் புதைக்க வேண்டிய அவலநிலைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில்,
கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான முறையான மற்றும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மயானம் / எரியூட்டு இடம் இல்லாத காரணத்தால், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபர்கள் இறந்த பிறகு, அவர்களது உடலை பொதுச்சாலையோரத்தில் வைத்து இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் குழு 03.09.2026 அன்று அங்கு சென்று ஆய்வு செய்தோம். அப்போது அந்த மக்கள் கூறியது, ஓரிரு நாட்களுக்கு முன்பாக இறந்த நபரை சாலை ஓரம் எரியூட்டியது சம்பந்தமான தகவலைக் கூறினார்.
அத்துடன் அது சம்மந்தமான புகைப்படம் காணொளியைக் காண்பித்தனர், மேலும், கடந்த காலங்களில் இறந்த நபர்களின் உடல்களும் சாலையோரத்தில் எரியூட்டப்பட்டதாகவும் எடுத்துக்கூறினர்.
இப்படி பல ஆண்டுகளாக இறந்த நபரின் உடல் சாலை ஓரத்தில் எரியூட்டப்படுவதும், அதனைச் சுற்றி பொதுமக்கள் திரண்டு நிற்பதும், அதே சாலையில் வாகனங்கள் சென்று வருவதுமாக உள்ளது.
தன்னார்வலர்கள் குழு சென்று வந்த பிறகும் கடந்த 05.09.2026 அன்றும் இறந்த நபரை சாலை ஓரம் வைத்து எரியூட்டப்படுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article 21 தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் (Ashray Adhikar Abhiyan v. Union of India,(2002) 2 SCC 27), மனித கண்ணியம் என்பது ஒருவர் உயிருடன் இருக்கும் காலத்திற்குள் மட்டும் அல்லாது, இறந்த உடலுக்கும் கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு செய்யப்பட வேண்டிய உரிமை Article 21-ன் பாதுகாப்புக்குள் வருகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் பிரிவு 110(f)-ல், கிராம ஊராட்சியின் கடமைகளில் “opening and maintenance of burial and burning grounds” என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மயானம் / எரியூட்டு இடத்தை ஏற்படுத்தி பராமரிப்பது வெறும் பணியாக அல்லாமல், சட்டத்தால் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட கடமையாகும்.
அத்துடன், பிரிவு 116-ன் கீழ் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இணைந்து பொதுவான மயானம் / எரியூட்டு இடத்தை ஏற்படுத்தி பராமரிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது.
அது போல, Tamil Nadu Village Panchayats (Provision of Burial and Burning Grounds) Rules, 1999-ன் Rule 3-ல், போதுமான வசதி இல்லாதபோது, கிராம ஊராட்சி தனது செலவில் அடக்கம் அல்லது எரியூட்டலுக்கான இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அரசுக்கு, அறப்போர் இயக்கம் கோரிக்கை: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டு வலசு ஊராட்சி, புது வெள்ளியம் பாளையம் கிராமத்திற்கு உரிய, நிரந்தரமான மற்றும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மயானம் / எரியூட்டு இடத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று பதிவிடப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN