Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 செப்டம்பர் (ஹி.ச.)
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை காலதாமதமின்றி திறந்துவிட வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஒரே நாளில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 142-வது கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டத்தில், இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம், மொத்தம் 7.776 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு உரிய நேரத்தில் செயல்படுத்தாததால், தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் நலிவடைந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கர்நாடக அரசின் அலட்சியப் போக்கால், டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திறக்கப்பட்டதாகவும், இதனால் குறுவை உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் காய்ந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக விவசாயிகளுக்கும் விளைப் பயிர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்போதைய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு காலதாமதமின்றி செயல்படுத்துவதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கர்நாடக காங்கிரஸ் அரசால் தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படுவதை தமிழக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், கூட்டணிப் பாசத்தைவிட விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P