Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரர் மற்றும் சகோதரர் மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு, புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கடந்த 6-ஆம் தேதி மரிய வில்சன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொண்டார். அப்போது நீதிபதி சந்திரசேகர், அடுத்தகட்ட விசாரணையை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்ட இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
விசாரணையின்போது, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், மரிய வில்சன் தாக்கியதாக கூறப்படும் வீடியோவை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு வெளியிட்ட அவரது சகோதரரின் மனைவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வாதிடப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சந்திரசேகர் உத்தரவிட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN