Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! பார்வையாளர்களுக்கு சிறப்பு அனுமதி – அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 வருடங்கள் கழித்து, வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இச்சிறப்பு நிகழ்ச்சியில் மேல்மாடத்திற்குச் சென்று பங்கேற்க பலரும் ஆர்வம் செலுத்துவர்.
இந்நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய 9,000 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டும் ஆளுங்கட்சி அரசியல் தலையீடு காரணமாக வழங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. பொதுவாக மீனாட்சி அம்மன் கோவிலின் உபயதாரர்கள், சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்கள், அனைத்து சமுதாயத் தலைவர்கள் - பிரமுகர்கள் என பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவது உண்டு.
ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் அச்சடிக்கப்பட்ட 9,000 சிறப்பு அழைப்புகள் இன்னும் வழங்கப்படாதது ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள், முக்கியஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. எனவே, எந்தவிதமான பாகுபாடுகளுக்கும் இடமின்றி, அச்சடிக்கப்பட்ட 9,000 சிறப்பு அழைப்புகளும் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது குழுவிடம் சிக்கிவிடாத வண்ணம், இந்து சமுதாய அனைத்து முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கக்கூடிய வகையில், இந்து அறநிலையத் துறை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அழைப்புகளை விநியோகம் செய்ய வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சியில் எந்தவிதமான குறை குற்றங்களுக்கும் இடமில்லாத வகையில், அறங்காவலர் குழு, அறநிலையத்துறை அதிகாரிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து இதை ஒரு ஆன்மீக நிகழ்ச்சியாக நடத்த வேண்டுமே தவிர, இதை ஒரு அரசியல் நிகழ்ச்சியாக மாற்றக் கூடாது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் யாரையும் ஒதுக்கி வைக்கவோ, புறந்தள்ளவோக் கூடாது. பாரபட்சமற்ற வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பு அழைப்புக்கான அழைப்புகளை உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN