சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
சென்னை, 09 செப்டம்பர் (ஹி.ச.) நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக சென்னை பெருநகர காவல்துறை 13 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு


சென்னை, 09 செப்டம்பர் (ஹி.ச.)

நாடு முழுவதும் வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக சென்னை பெருநகர காவல்துறை 13 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாஜக உள்ளிட்ட 29 இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி, விநாயகர் சிலைகளை நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும், அதேபோல் தீயணைப்புத் துறை மற்றும் மின்வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்றுகளைப் பெறுவது கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் வழங்கப்படும் படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிப்பதாக உறுதியளித்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிலைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்யப்பட்டிருக்கக் கூடாது என்றும், நிறுவப்படும் சிலையின் உயரம் அடித்தளத்திலிருந்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும் கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை, சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும் என்றும், சிலை நிறுவப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்களுக்கு ஆதரவான விளம்பரப் பலகைகள், விளம்பரத் தட்டிகள் வைக்கக்கூடாது என்பதும் முக்கிய கட்டுப்பாடுகளில் ஒன்றாகும்.

மேலும் தீ பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், மின்சார சாதனங்கள் மற்றும் பந்தல்களை அவ்வப்போது கண்காணித்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலை கரைப்பு தொடர்பாக, காவல்துறை அனுமதித்த நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நான்கு சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் சென்று அமைதியான முறையில் கடலில் கரைக்க வேண்டும் என்றும், சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை என்றும் காவல் ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அரசின் உத்தரவுப்படி விதிகளை பின்பற்றி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு விழாவை நடத்த வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b