Enter your Email Address to subscribe to our newsletters
பாலக்காடு, 14 ஜனவரி (ஹி.ஸ.)
கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடிகளில், அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் ரெய்டு நடத்தி, லஞ்ச பணம், 1.77 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பாலக்காடில் உள்ள வாளையார், கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுப்புணி ஆகிய இடங்களில், ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடிகளில் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாக, லாரி ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன்படி கடந்த, 11ம் தேதி அதிகாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பணம் பறிமுதல் செய்து, தொடர்புடைய ஆர்.டி.ஓ., ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சோதனைச்சாவடிகளில் லஞ்சம் பெறுவது தொடர்வதாக மீண்டும் தகவல் கிடைத்ததால், பாலக்காடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறுவேடத்தில் சோதனை சாவடிகளை கண்காணித்தனர்.
வாகன ஓட்டுனர்களிடம் லஞ்சம் பெறுவதை உறுதி செய்த போலீசார், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் ஒரே நேரத்தில், அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.வாளையார் சோதனைச் சாவடியில் 1,34,990 ரூபாய்; கோபாலபுரத்தில், 21,110 ரூபாய்; கோவிந்தாபுரத்தில், 10,550; நடுப்புணியில், 7,480 ரூபாய், என மொத்தம், 1,77,490 ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி., சசிதரன் கூறியதாவது:
வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரி ஊழியர்களிடம், வசூல் செய்த லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்துள்ளோம். அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்சப் பணத்தை மறைத்து வைத்திருந்தனர்.
சோதனை நடத்தும் போதும், ஏராளமான லாரி ஊழியர்கள் 'சீல்' பதிவு செய்வதற்காக பணத்துடன் காத்திருந்தனர்.
சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் ஆர்.டி.ஓ., ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b