Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வருகின்றனர். பல கட்சித் தலைவர்களும் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான அம்மா மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 108 கிலோ பிரம்மாண்ட கேக்கை வெட்டி, எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
வரலாற்றில் சமமான ஒருவருடன் தான் போர் இடுவேன் என பேசியவர் எம்ஜிஆர். அதனால் தான் 13 வருடங்களாக திமுகவை ஆட்சி கட்டிலில் விடாமல் இருந்தார்.
திமுகவிலிருந்து எம்ஜிஆர் வெளியேறிய பிறகு கலைஞர் அமைச்சராகவும் இல்லை, முதலமைச்சராகவும் இல்லை.
தீய சக்தியாக இருக்கின்ற கலைஞர் குடும்ப ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட வேண்டும் என்ற வகையில் அதிமுகவை 1972 இல் ஆரம்பித்து 1977 ஆட்சியை பிடித்து 1980, 1984 வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் எம்ஜிஆர்.
பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்ற பாடல்கள் என்றால் அது எம்ஜிஆர் பாடல்கள் தான். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் என்பன உள்ளிட்ட பாடல்களை பாடி காட்டினார்.
அதிமுகவை பொருத்தவரை இது ஏழையின் கட்சி, ஏழைகளின் கட்சி.
எம்ஜிஆரின் புகழ் என்பது எல்லா தரப்பட்ட மக்களும் முழுமையாக போற்றக்கூடிய வகையில் உள்ளது. எம்ஜிஆரை புகழ்கிறார்கள் கருணாநிதியை யாராவது புகழ்கிறார்களா? கருணாநிதியை ஒருவரும் புகழப்போவது கிடையாது.
மு.க.ஸ்டாலின் தனது அப்பாவினுடைய சமாதிக்கு எவ்வளவு கோடி செலவு பண்ணி ஆடம்பரம் பண்ணினாலும் வந்து பார்த்தவர்களை கணக்கிட்டுப்பாருங்கள்.
பொங்கலன்று கூட வைத்துக் கொள்ளுங்கள் எம்ஜிஆர் - ஜெயலலிதா இரண்டு நினைவிடத்திற்கு வந்தவர்களுடைய கூட்டம் எவ்வளவு? கலைஞர் நினைவிடத்திற்கு வந்த கூட்டம் எவ்வளவு? 10% கூட இருக்காது.
எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாத அழியாத புகழுக்கு சொந்தக்காரர்கள்.
ரூ. 526 கோடியில் கருணாநிதி பன்னாட்டு மையம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பாட்டி விமர்சித்த வீடியோ வைரலாகி வருகிறது.
பன்னாட்டு மையம் அமைக்க ரூ. 526 கோடி பணம் இருக்கிறது. பொங்கல் பரிசாக எடப்பாடியார் ரூ. 2000 கொடுத்தார். அன்று 5000 ரூபாய் கேட்டீர்கள், 5000 வேண்டாம் 2500 வது கொடுக்கலாம். அல்லது ஆயிரமாவது கொடுக்கலாம். ஆனால் மக்களுக்கு பட்டை நாமம்.
குருமூர்த்தி என்னிடம் பலமுறை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதற்கு ஆளாகக் கூடாது என்றால் வாயை அடக்க வேண்டும். பாஜக கூட்டணி வைக்காதது கட்சி எடுத்த முடிவு.
கட்சி முடிவு எடுத்த பிறகு இவர் என்ன பேசுவது? இவர் பேச வேண்டிய அவசியமே கிடையாது. வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கி கட்டிக் கொள்ள நேரிடும்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளை ட்ரெண்டாகலாம். ஆனால் இன்று தேவையில்லாத ஒரு விஷயம் டிரெண்டாகி உள்ளது.
மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. உதயநிதியின் மகன் இன்பநிதி, அவரது நண்பர்கள் பார்ப்பதற்காக ஆட்சியரை நிற்க வைத்து இருக்கிறார்கள். ஆட்சியர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அவர் என்ன ஆட்சியை எதிர்த்தா கொடுப்பார்?
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், பாலியல் விவகாரம் என மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சியை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
வாய்மையே வெல்லும் என்ற நிலை போய், பொய்மையே வெல்லும் என்ற நிலையில் திமுக ஆட்சி உள்ளது.
எங்கள் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் உலக அரசியலும் கிடையாது, தமிழ்நாடு அரசியலும் கிடையாது, என்றார்.
Hindusthan Samachar / Durai.J