Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 17 ஜனவரி (ஹி.ச.)
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (40). டிரைவர். இவரது மனைவி கலைத்தாய் (33). இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை வந்தனர்.
கோவையில் துடியலூர் எஸ்.எம். நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கலைத்தாயிக்கு, ஜி.எம் மில்லை சேர்ந்த அரிச்சந்திரன் (43) என்பவர் அறிமுகமானார்.
அரிச்சந்திரன் என்.ஜி.ஜி.ஓ காலனியில் சொந்தமாக பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். அங்கு கலைத்தாய் பணிக்கு சேர்ந்தார். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். மேலும் கலைத்தாய் அடிக்கடி அரிச்சந்திரனிடம் பணம் பெற்று வந்தார். அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைத்தாய், அரிச்சந்திரனிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பெற்று உள்ளார்.
அதன் பின் கலைத்தாய் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதுகுறித்து அரிச்சந்திரன் அவரிடம் கேட்டார். அதற்கு அவர் சரியான பதில் கூறாமல் அரிச்சந்திரனிடம் இருந்து விலகி சென்றார். மேலும், அரிச்சந்திரன் போன் செய்யும் போது அவரது அழைப்பை துண்டித்து வந்து உள்ளார். நாளடைவில் போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார். இதனால் அரிச்சந்திரன், அவரை சந்தித்து வேலைக்கு வரும் படி கேட்டார்.
இல்லை என்றால் பணத்தை திருப்பி தரும்படி கூறினார்.
ஆனால் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த வந்தார். கள்ளக் காதலை கைவிட்டதாலும், பணத்தை திருப்பி தராததாலும் அரிச்சந்திரன், கலைத்தாய் மீது கோபத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அரிச்சந்திரன், தனது உறவினர் புதுகோட்டை சேர்ந்த பிரசாத் (30) என்பவரை அழைத்து கொண்டு கலைத்தாயை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவரது கணவர் இல்லாததை அறிந்த இருவரும் கலைத்தாயிடம் பணத்தை திருப்பி தரும்படி தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது அரிச்சந்திரனுக்கும், கலைத்தாயுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அரிச்சந்திரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கலைத்தாயை சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் இருவரும் கலைத்தாயின் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தனர். அப்போது கலைத்தாயின் நண்பர் விக்னேஷ் (32) என்பவர் அங்கு வந்தார். அவர் வருவதை பார்த்த அரிச்சந்திரனும், பிரசாத்தும் ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விக்னேஷ் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அங்கு கலைத்தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இதுகுறித்து விக்னேஷ் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கலைத்தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய அரிச்சந்திரன், பிரசாத்தை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / Durai.J