பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் களத்திற்கு விஜய் வரவை  எதிர்பார்க்கும் கிராம மக்கள்
காஞ்சிபுரம் , 17 ஜனவரி (ஹி.ச.) பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்தால் விலை நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு கிராம மக்கள் பரந்தூர் விமான நிலைய எத
Paranthure airport issue


காஞ்சிபுரம் , 17 ஜனவரி (ஹி.ச.)

பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்தால் விலை நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு கிராம மக்கள் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவை அமைத்து தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏகனாபுரம் கிராமத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 907வது நாளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கிராம மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறது

இந்நிலையில் புதியதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கிய நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் விவசாயிகள், விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றினார்.

அதனை தொடர்ந்து விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்களை தவெக தலைவர் விஜய், சந்தித்து ஆதரவு தெரிவித்து கலந்துரையாட போராட்ட களத்திற்கு வருகை தர அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தவெக கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தவெக கட்சி நிர்வாகிகள் ஏகனாபுரம் கிராமத்தில் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தவெக கட்சி தலைவர் விஜய் வருவதற்கான இடங்களை சுத்தப்படுத்தி முன்னேற்பாடுகளை பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏகனாபுரம் கிராமத்தில் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று

தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு போராட்டக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் விமான நிலையம் திட்டத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் ஏகனாபுரம் கிராம் முழுவதையும் சுற்றிப் பார்த்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில் விவசாயத்தையும் விளைநிலங்களையும் நீர் நிலைகளையும் காக்க நடைபெறும் தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜய் போராட்டம் நடைபெறும் களத்திற்கு வருகை தருவதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Hindusthan Samachar / Raj