Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 17 நவம்பர் (ஹி.ச.)
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார்.
இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதன் தாக்கம் சமீபத்தில் நடந்த நியூயார்க் மேயர், நியூ ஜெர்சி மற்றும் விர்ஜினியா மாகாணங்களுக்கான கவர்னர் தேர்தல்களில் எதிரொலித்தது. இந்தத் தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சிபடு தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, மாட்டிறைச்சி, அன்னாசி பழம், காபி, வாழைப்பழங்கள், தேநீர், பழச்சாறுகள், கொக்கோ, சில உரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருட்கள் மீதான பரஸ்பர வரிகளை நீக்குவதாக டிரம்ப் அறிவித்தார்.
ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அமெரிக்க உணவு தொழில்துறை சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மேலும் அமெரிக்க மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இந்த உத்தரவினால் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM