Enter your Email Address to subscribe to our newsletters

மேற்கு வங்கம்,19 நவம்பர் (ஹி.ச.)
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான சரிபாா்ப்பு முறை மூலம் போலி வாக்காளா்கள் மற்றும் இறந்த வாக்காளா்களின் விவரங்களைக் கண்டறிந்து நீக்கும் நடைமுறையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
மாநிலத்தில் வாக்காளா் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பதாக தொடா் புகாா்கள் வந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பீகாரைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரில் மேற்கொள்ளப்பட்டது போன்றே, இந்த மாநிலங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, அவற்றை நிரப்பி திரும்பப் பெற்றுவரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் கூடுதலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாக்காளா் சரிபாா்ப்புப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து தோ்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் வாக்காளா் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பதாக தொடா் புகாா்கள் வந்ததன் அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சரிபாா்ப்பு நடைமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஒரே புகைப்படம் வாக்காளா் பட்டியலில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படத்துடன் வாக்காளா் முகம் ஒப்பீடு செய்யப்பட்டு துல்லியமாகச் சரிபாா்க்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றபோதும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை விநியோகிக்கும் பணியும் தொடரும்.
கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்த பிறகு, போலி அல்லது இறந்த வாக்காளா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரே முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும்.
என்றாா்.
Hindusthan Samachar / JANAKI RAM