தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 - சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!
கோவை, 19 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா அரங்கில் ''தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025'' இன்று முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர
மோடி


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா அரங்கில் 'தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025' இன்று முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார்.

மேலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 21வது தவணையும் பிரதமர் விடுவித்தார்.

இந்நிகழ்விற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர்.இராமசாமி, உழவர் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி .ஆர்.பாண்டியன், மேலாண்மை குழு தலைவர் வாழ.கருப்பையாஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, கோவை விமான நிலையம் வந்த பிரதமரை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் கொடிசியா சாலையில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாலையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் திரண்டு நின்று வரவேற்பளித்தனர்.

மேலும், தமிழக கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டன.

இதனை அடுத்து கொடிசியா அரங்கம் வந்த பிரதமருக்கு விழா குழுவினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநாட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக இயற்கை வேளாண் பொருட்கள் கண்காட்சி அரங்கினை பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து இயற்கை விவசாயிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மேடைக்கு வந்ததும், மாநாட்டில் கலந்து கொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

விழா குழுவினர் சார்பில் இயற்கை வேளாண் பொருட்களால் உருவாக்கப்பட்ட நினைவு பரிசுகள் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

Hindusthan Samachar / V.srini Vasan