Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.)
ஒரே நேரத்தில் 3 முறை ‘தலாக்’ கூறி விவகாரத்து செய்யும் முத்தலாக் நடைமுறை இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் மாதத்துக்கு ஒரு முறை வீதம் 3 மாதங்களில் தலாக் கூறி விவகாரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் கணவர் சார்பாக மற்றொருவர் குறிப்பாக வக்கீல் மூலம் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையும் உள்ளது.
இந்த விவகாரத்தை நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் பூயன், கோடீஸ்வர் சிங் அமர்வு விசாரித்தது. அப்போது கணவர் சார்பாக வேறொருவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை ரத்து செய்த நீதிபதிகள், நாகரிக சமூகத்தில இது அனுமதிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
பின்னர் 3 மாத தலாக் நடைமுறை உள்பட இஸ்லாமில் உள்ள தலாக் நடைமுறைகள் தொடர்பாக விரிவான மனுவை தாக்கல் செய்ய மனுதாரர்களிடம் கூறிய நீதிபதிகள், அதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இது பரவலான ஒரு மத நடைமுறையை ஒழிப்பது பற்றிய கேள்வி அல்ல எனவும், மாறாக அரசியலமைப்பு நெறிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்றும் நீதிபதிகள் கூறினர்.
Hindusthan Samachar / JANAKI RAM