Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.)
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று
(நவ 20) அளித்துள்ள தீர்ப்பு மிகவும் பிற்போக்குத்தனமானது என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உச்சநீதிமன்ற தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரை மீது ஒன்றிய அரசு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்திருக்க வேண்டும். ஒன்றிய அரசு தாமதித்தால் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்றும் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் துணிச்சலான ஒரு அமர்வு அளித்த தீர்ப்பை இன்று அரசியல் சாசன அமர்வு தலைகீழாக மாற்றிவிட்டது. துணிச்சல் மிக்க உச்ச நீதிமன்ற அமர்வு மசோதா மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது.
நீதித்துறையின் சுதந்திரத்தையே ஒன்றிய அரசு அழிப்பதை உச்ச நீதிமன்றத்தின் அலட்சியம் அனுமதிக்கிறது. மசோதாவுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என அரசியல் சட்ட அமர்வு கூறியுள்ளது.
காலவரையின்றி மசோதா மீது முடிவெடுக்காமல் ஆளுநர்கள் காலம் தாழ்த்துவதை தடுக்கும் வகையில் ஒரு அமர்வு தீர்ப்பளித்தது. காலவரையின்றி ஒரு மசோதாவை நிறுத்திவைத்தால் அது ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்ற தீர்ப்பையும் தலைகீழாக்கிவிட்டது.
ஏவல் ஆட்கள் போல செயல்படும் ஆளுநர்கள் மாநில அரசுகளின் சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b