Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 நவம்பர் (ஹி.ச.)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது. கடந்த செப்., 11ல் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (நவ.,20) ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மாநில சட்டமன்றங்களில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான சட்ட விதி 200ன்படி, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது, கூட்டாட்சி நலனுக்கு எதிரானது.
மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் வைத்திருப்பதற்கு கவர்னர்களுக்கு அதிகாரம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
ஆளுநர்களுக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, இரண்டாவது மசோதாவை மறு பரிசீலனை செய்யக்கோரி திருப்பி அனுப்புவது, மூன்றாவது, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
ஏப்ரல் 8-ம் தேதி இரு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, நிலுவையில் இருந்த தமிழக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தீர்ப்பானது, அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பின் செயல்பாடுகளை தானே கையில் எடுத்துக் கொண்டதற்கு சமம். எனவே, அந்த தீர்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
ஆளுநர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் நீண்ட காலம் மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்துக்களை கேட்க தேவையில்லை. வேண்டுமென்றால் மசோதா மீது நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டு கொள்ள முடியும்.
மசோதா மீது முடிவெடுக்க குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.
Deemed Assent (தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதுவது) என்ற கருத்து, அரசியலமைப்பின் ஆன்மாவுக்கும், அதிகாரப் பகிர்வு கோட்பாடுகளுக்கும் முரணானது.
அரசியல் சட்டம், Deemed Assent (தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதுவது) என்பதை அனுமதிக்கவில்லை.
உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி, Deemed Assent (தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதுவது) வழங்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b