Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 நவம்பர் (ஹி.ச.)
தலைநகர் டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தற்கொலை குண்டாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இவரோடு பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதி பற்றியும் விசாரிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் டாக்டர்கள். இவர்கள் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு ரூ.20 லட்சம் நிதி உதவி செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் சமீபத்திய விசாரணையில் அந்த பணத்தை பயங்கரவாதிகளே சுயமாக திரட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை குண்டான உமர் முகமது ரூ.2 லட்சம், முசாமில் ஷகீல் ரூ.5 லட்சம், அதீல் ராதர், முசாபர் ஆகியோர் தலா ரூ.4 லட்சம், ஷாகின் சயீத் ரூ.5 லட்சம் என பங்கு போட்டுள்ளனர்.
இதில் குறைவான தொகை கொடுத்ததால் முசாமில் ஷகீல் உமர் முகமதுவுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் உமர் முகமது தனது சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட் காரை முசாமிலுக்கு கொடுத்துள்ளார். இதற்கிடையே அதீல் ராதரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கியை முசாமில் ஷகீல் ரூ.6½ லட்சத்துக்கு வாங்கியதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயங்கரவாதிகள் வெளியே வாங்குவதற்கு முன்பு, அல்பலா பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் இருந்து திருடியுள்ளனர். பின்னர் வெளியே அதிக அளவில் வாங்கிய பிறகு அவற்றை பத்திரமாக சேமித்து வைக்க டாக்டர் உமர் முகமது, பெரிய ‘பிரீசர்’ வாங்கி வைத்துள்ளார்.
சம்பவத்தோடு தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளுக்கும் வெளிநாடுகளில் இருந்தே உத்தரவுகள் வந்துள்ளன. இந்த உத்தரவுகளை 3 பேர் பிறப்பித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை துருக்கியில் சென்று பயங்கரவாதிகள் சந்தித்து வந்துள்ளனர்.
முசாமில், அதீல் ராதர் மற்றும் முசாபர் ஆகியோர் ஒகாசா என்ற உத்தரவிடும் நபரை சந்தித்துள்ளனர். இவர்கள் துருக்கியில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்வதற்கு திட்டமிட்டதும், பின்னர் அது கைவிடப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதன் மீதான விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே கார் வெடித்த இடத்தில் சேகரிக்கப்பட்ட சிறு சிறு உடல் பாகங்கள் இதற்கு முன்பு அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இன்னும் 3 உடல் பாகங்கள் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. ஒரு தாடை, ஒரு கால் மூட்டு, தலையும், கை, காலும் இல்லாத முண்டம் ஆகியவை இன்னும் லோக் நாயக் ஆஸ்பத்திரி பிணவறையிலேயே உள்ளன,.
இவற்றை டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி, யாருடையது என கண்டறிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM