Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 23 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம்,பழனி, திருச்செந்தூர் என பல புனித தலங்களிலும் வழிபாடு மேற்கொள்வர். அந்த வகையில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த ஒருவார காலம் முதல் தற்போது வரை மழை பெய்து வருவதால் ஏற்கனவே திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 5 தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் நிறுத்தும்போது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணமும் பாதுகாப்பாக நிறுத்தி கோவிலுக்கு சென்று சாமி
தரிசனம் செய்யுமாறு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் ஏற்கனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவு வருவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அம்மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b