Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஒரே தருணத்தில் பல குடும்பங்களை சிதைக்கும் இந்த கொடுரமான துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தங்களது அன்றாட வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இவ்வாறு எதிர்பாராத முறையில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி கனவுகளும் ஆசைகளும் இருக்கும். அதனை நொறுக்கும் வண்ணம் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவத்தில் கடுமையாக காயமடைந்தவர்கள் விரைவாக நலம்பெற விரும்புகிறேன்.
அவர்களுக்கு உரிய சிகிச்சை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து அரசு உடனடியாக முழுமையாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் பொறுப்புணர்வு, சாலைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து கண்காணிப்பு போன்ற அனைத்தும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மீளாய்வு செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகியுள்ளது.
இந்த பேரதிர்ச்சியூட்டும் நிகழ்வால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களின் வேதனை அனைவரின் மனத்தையும் கனக்கச் செய்கிறது.
இந்த துயர நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், மனிதநேயத்தின் சார்பிலும், வேதனையுடன் நிற்கும் குடும்பங்களின் பக்கம் உறுதியாக நிற்கின்றோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ