Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 நவம்பர் (ஹி.ச.)
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று (நவ.24) பொறுப்பேற்றார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அரசியலமைப்பை காப்பேன் என்றும், கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும் இந்தியில் கூறி சூர்யகாந்த் பதவியேற்றார். இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு மே 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி சூர்யகாந்த், தலைமை நீதிபதியாக இன்று தன் பணியை துவங்க உள்ளார். அவர் 2027, பிப்., 9ம் தேதி வரை, 15 மாதங்கள் இப்பதவியில் இருப்பார்.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், 'பெகாசஸ் ஸ்பைவேர்' வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b