Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 24 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களிலேயே கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் இன்று (நவ 24) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று காலை தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதேபோல் ஆண்டுதோறும் பெரம்பலூர் மாவட்டத்தின் திருவண்ணா ‘மலை’ எனப்படும், எளம்பலூர் பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது.அதன்படி, 43-வது ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி மாலை 6-மணியளவில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த தீபத் திருவிழாவில் 5 அடி உயர செப்புக் கொப்பரையில் ஏற்றப்படவுள்ள 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இது குறித்து இக்கோவிலை சேர்ந்த மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி கூறுகையில்,
மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு தீபத்திருவிழா 3ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, 2100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பசு நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் என 1008 லிட்டர் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இதற்காக நெய், நல்லெண்ணை வழங்குவோர் வழங்கலாம்.
வரும், 3ஆம் தேதி காலை 7 மணியளவில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வபூஜை நடைபெறுகிறது.
தொடா்ந்து காலை 10.15 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகாதீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஊர்வலமாக பிரம்மரிஷி மலைக்கு கொண்டுவரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b