Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 நவம்பர் (ஹி.ச.)
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்கனவே தி.நகரில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது போன்று சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபாதை வளாகங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பெங்களூரில் இருக்கும் எம்.ஜி ரோடு, சர்ச் ஸ்ட்ரீட் போல நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் நடைபாதை வளாகம் அமைய உள்ளது.
இதில் அகலமான நடைபாதைகள், பூங்காக்கள், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளது. சாலையின் முன்பகுதியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு, கார்பன் உமிழ்வு இல்லாத சாலையாகவும் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கலை நிகழ்ச்சிகள், சாலைகளில் இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தும் வகையிலும் இந்த சாலை மாற்றி அமைக்கப்படவுள்ளது, குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட உள்ளது.
உலக வங்கியின் சென்னை நகர கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் 19 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை பிளாசா அமைக்கும் பணி 1.5 ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டாலும் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் போது இந்த பகுதியில் பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், காதர் நவாஸ்கான் சாலையில் கூடுதல் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில், 100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 45 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்த ஏதுவாக மல்டி லெவல் பார்க்கிங் வசதி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரின் வசதிக்காக, இங்கு மின்சார வாகனம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b