தரமற்ற மருந்துகளின் விபரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியீடு
புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னர் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்
தரமற்ற மருந்துகளின் விபரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியீடு


புதுடெல்லி, 25 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னர் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின் போது தரமற்ற மற்றும் போலி மருந்துகள் கண்டறியப்பட்ட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், காய்ச்சல், சளித்தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், கோல்ட்ரிஃப் உற்பத்தி நிறுவனத்தில் கடந்த மாதம் சோதனை நடத்தியதையோ, கோல்ட்ரிஃப் மருந்தை தரமற்றது என வரையறைப்படுத்தியதையோ, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர், மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதனால்தான் தரமற்ற மருந்துகளின் விவரங்களை வழங்காத மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இந்த மாதத்தில் இடம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / vidya.b