சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை உயர்த்த முடிவு
சபரிமலை, 25 நவம்பர் (ஹி.ச.) மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்
சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை உயர்த்த முடிவு


சபரிமலை, 25 நவம்பர் (ஹி.ச.)

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த

16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது.

அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவரும் பலியானார்.

இதையடுத்து பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

மேலும் பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன. தேவசம்போர்டின் இந்த அதிரடி நடவடிக்கையால் உடனடி முன்பதிவு மூலமாக சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் இல்லை.

உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.

இதனால் பக்தர்கள் வருகைக்கு தகுற்தாற்போல் ஸ்பாட் புக்கிங் மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சபரிமலையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக கேரள மாநில டி.ஜி.பி. ரவுடா சந்திரசேகர் சபரிமலைக்கு வந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவரது தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உடனடி முன்பதிவு மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை, பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அது 5 ஆயிரமாகவே இருந்தது.

ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் இன்று அதிகளவில் சபரிமலைக்கு வந்தனர். இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பதினெட்டாம் படி ஏறி சாமி தரசனம் செய்வதற்காக நின்ற பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. அங்கிருந்து பதினெட்டாம் படியை அடைய பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.

பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Hindusthan Samachar / JANAKI RAM