Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 25 நவம்பர் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி கடந்த 2020 ஆகஸ்டில் தொடங்கியது.
இக்கோயில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று(நவ 25) பிரதான கோயில் கோபுரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்க அயோத்தி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
அயோத்தி ராமர் கோவிலில் கொடி ஏற்றுவதற்கு வந்த பிரதமர் மோடி, ராமர் கோவில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமர் கோவிலில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி காவிக்கொடியேற்றினார்.
ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடியானது பட்டொளி வீசியது.
Hindusthan Samachar / vidya.b