Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத், 26 நவம்பர் (ஹி.ச.)
விமான இன்ஜின்களின் பராமரிப்பு, பழுது சரி பார்த்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சப்ரான் நிறுவனம் புதிய மையத்தை ஐதராபாத்தில் இன்று
(நவ 26) தொடங்கியுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் பங்கேற்றனர். இந்த மையத்தின் சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவில் சப்ரான் நிறுவனத்தின் முதலீடு நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. இது, உலகின் மூன்றாவது பெரிய சந்தை ஆகும். நமது விமானப் போக்குவரத்து துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
விமான சேவைகளை அதிகரிக்கும் நோக்கத்துடன், நமது விமான நிறுவனங்கள் 1500க்கும் மேற்பட்ட புதிய விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பகமான கூட்டாளியாக இந்தியா இருந்து வருகிறது. உலகளாவிய முதலீடு மற்றும் தொழில்களை ஊக்குவிக்க, அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b