Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 26 நவம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள உலக புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர்.
இதுவரை தலா 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்.
நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை.தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனத்திற்கு வருகின்றனர்.
கடந்த 23ம் தேதி மிக அதிகமாக 1.17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மறுநாளும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மண்டல காலத்தில் இன்று (நவ 26) காலை வரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக தேவசம் போர்டு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தேவசம் போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் அல்லது உடனடி முன்பதிவு கட்டாயமாகும்.இவை இரண்டும் இல்லாத பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
உடனடி முன்பதிவு முடிந்துவிட்டால் மீண்டும் அடுத்த நாள் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும்.
மறுநாள் தரிசனத்திற்கு செல்லும் வரை பக்தர்கள் தங்குவதற்கும், உணவு உள்பட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b