Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 நவம்பர் (ஹி.ச.)
கட்டுமானத் தொழிலாளர்களுக்கான ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் 22.09.2025 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசனால் துவக்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 50000 தொழிலாளர்கள் பயன் பெற ஏதுவாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு ரூ.800/- வீதம் ஊதியம் மற்றும் தினசரி உணவு பயிற்சி காலத்தின் போது வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு, சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு, உடல் நலன் பேணுதல், அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேமிப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி நிறைவு பெற்றபின் திறன் மதிப்பீடு செய்யப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது திறனையும் தொழில் தரத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 22.09.2025 முதல் 18.11.2025 வரையில் வழங்கப்பட்ட பயிற்சியில் இதுவரை 21,334 கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். எஞ்சியுள்ள பயிற்சி இலக்கை டிசம்பர் 2025-க்குள் நிறைவு செய்திட தொழிலாளர் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b