Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 27 நவம்பர் (ஹி.ச.)
கவுகாத்தியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கே.எல். ராகுல் 6 ரன்களில் நடையை கட்டினார்.
4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் இருந்தனர்
நேற்று 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
குல்தீப் யாதவ் 5 ரன்களும் , துருவ் ஜூரேல் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் . பின்னர் வந்த ரிஷப் பண்ட் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் நிலைத்து ஆடிய சாய் சுதர்சன் 13 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா மட்டும் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். அவர் 54 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ஹார்மர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் . இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே கொல்கத்தா டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா , இந்த வெற்றியால் தொடரை 2-0 என வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது.
Hindusthan Samachar / JANAKI RAM