Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 நவம்பர் (ஹி.ச.)
சென்னை போரூரில் வசித்து வந்த சிறுமி ஹாசினி, கடந்த 2017ல் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர், சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, படுகொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இவ்வழக்கில், அவர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், செலவுக்கு பணம் தர மறுத்த தன் தாயை, தஷ்வந்த் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இவ்வழக்கில் மீண்டும் அவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், தஷ்வந்தை குற்றவாளியாக அறிவித்து, மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால், உச்ச நீதிமன்றத்தை தஷ்வந்த் அணுகினார்.
அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, தஷ்வந்த் மீதான குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க போலீஸ் தரப்பு தவறிவிட்டதாக கூறி, மரண தண்டனையை ரத்து செய்து, உடனடியாக விடுவிக்குமாறு கடந்த அக்., 8ம் தேதி உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Hindusthan Samachar / JANAKI RAM