Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 28 நவம்பர் (ஹி.ச.)
புதுடெல்லியில் இன்று
(நவ 28) காலை 8 மணி அளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 384 ஆக இருந்தது. நேற்று
(நவ 27) மாலை 4 மணிக்கு இது 377 ஆக இருந்தது. காற்றின் தரக் குறியீடு 301க்கு மேல் எனில் சுகாதார எச்சரிக்கை நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லி உள்பட வட மாநிலங்களில் நிலவும் காற்று மாசு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ 28) வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
நான் சந்திக்கும் ஒவ்வொரு தாயும் என்னிடம் ஒரே விஷயத்தைச் சொல்கிறார்கள். எனது குழந்தை நச்சுக் காற்றை சுவாசித்து வளர்கிறது, சோர்வடைகிறது, அச்சம் கொள்கிறது, கோபப்படுகிறது என்பதே அது.
மோடி அவர்களே, இந்தியக் குழந்தைகள் நம் கண் முன்பாக மூச்சுத்திணறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்? உங்கள் அரசாங்கத்திடம் ஏன் எந்த அவசரமும் இல்லை, திட்டமும் இல்லை, பொறுப்புக்கூறல் இல்லை?
காற்று மாசுபாடு குறித்தும், இந்த அவசர நிலையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய கடுமையான செயல் திட்டம் குறித்தும் நாடாளுமன்றத்தில் உடனடியாகவும் விரிவாகவும் விவாதிக்க வேண்டியது அவசியம்.
நமது குழந்தைகளுக்கு சுத்தமான காற்று தேவை. சாக்குப்போக்குகளும் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளும் அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b