ஆதார், பான் கார்டுகளை அச்சு அசலாக உருவாக்கும் கூகுளின் புதிய ஏ.ஐ. மாடல் 'நானோ பனானா' - அதிர்ச்சி தகவல்
சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.) கூகுளின் ''நானோ பனானா'' (Nano Banana) என்ற புதிய ஏ.ஐ. மாடல் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டுகளின் மிகவும் துல்லியமான போலிகளை உருவாக்க முடியும் என்று ஒரு தொழில்நுட்ப வல்லுநர் சமூக ஊடகங்களில் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர
ஆதார், பான் கார்டுகளை அச்சு அசலாக உருவாக்கும் கூகுளின் புதிய ஏ.ஐ. மாடல்  'நானோ பனானா' - அதிர்ச்சி தகவல்


சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)

கூகுளின் 'நானோ பனானா' (Nano Banana) என்ற புதிய ஏ.ஐ. மாடல் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டுகளின் மிகவும் துல்லியமான போலிகளை உருவாக்க முடியும் என்று ஒரு தொழில்நுட்ப வல்லுநர் சமூக ஊடகங்களில் நிரூபித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ஹர்வீன் சிங் சதா (Harveen Singh Chadha), இந்த ஏ.ஐ. மாடலைப் பயன்படுத்தி Twitterpreet Singh என்ற பெயரில் போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளை உருவாக்கி அதன் முடிவுகளை ஆன்லைனில் வெளியிட்டார்.

அவர், நானோ பனானா நன்றாக உள்ளது, ஆனால் அதுவே ஒரு பிரச்சனையும் கூட. இது மிகவும் அதிக துல்லியத்துடன் போலியான அடையாள அட்டைகளை உருவாக்க முடியும். என்று சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

பழைய ஏ.ஐ. மாடல்கள் அமைப்பு ரீதியான வடிவங்களில் பிழைகளை ஏற்படுத்தின. ஆனால், நானோ பனானா ப்ரோ மாடல், layout மற்றும் முக விவரங்களை மிகத் துல்லியமாக உருவாக்கியுள்ளதாக ஹர்வீன் சிங் சதா கூறியுள்ளார்.

இருப்பினும், ஜெமினி ஏ.ஐ.யின் watermark தெளிவாகத் தெரிவதாகவும், எழுத்துரு மற்றும் சிறிய எழுத்துக்களில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹர்வீன் சிங் சதாவின் இந்த பதிவு டிஜிட்டல் அடையாளச் சரிபார்ப்பு அமைப்புகளின் பாதுகாப்புக் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே, கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட படங்களை அடையாளம் காண SynthID எனப்படும் digital fingerprinting system பயன்படுத்தியுள்ளது. மேலும், ஜெமினி 3 அப்டேட், பயனர்கள் தாங்களே ஒரு படத்தை பதிவேற்றி அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் வசதியையும் அளிக்கிறது.

ஆனால், ஹர்வீன் சிங் சதா இதற்குப் பதிலளிக்கும்போது, ஒவ்வொருவரும் அடையாள அட்டையை ஜெமினி செயலி மூலம் ஸ்கேன் செய்யப் போவதில்லை என்றும், விமான நிலையங்கள் அல்லது ஹோட்டல்களில் ஆதாரைக் காட்டும் போது, அவர்கள் உண்மையில் அதை ஸ்கேன் செய்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தவே நோக்கம்

ஹர்வீன் சிங் சதா தனது நோக்கம் பயத்தை ஏற்படுத்துவது அல்ல, மாறாக விழிப்புணர்வை உருவாக்குவதுதான் என்று தெளிவுபடுத்தினார். ஏ.ஐ. இவ்வளவு வேகமாக முன்னேறும்போது, சரிபார்ப்பு அமைப்புகளும் அதே வேகத்தில் மேம்படுத்தப்பட வேண்டும், என்று வலியுறுத்தினார்.

இந்தச் செயல், மேம்பட்ட ஏ.ஐ. கருவிகள் எவ்வாறு மோசடி ஆவணங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகளை அதிகரித்துள்ளது. இந்தியாவின் வேகமாக டிஜிட்டல் மயமாக்கப்படும் சூழலில், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்த வேண்டிய தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இதனிடையே, மத்திய பிரதேசத்தில் போலி ஆதார்களை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த சாப்ட்வேர் என்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதார் அமைப்பில் உள்ள ஓட்டைகளை இவர் ஆதார் அடையாள மோசடியில் ஈடுபட்டதாக பலாகாட் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர் 39 வயதான மோசின் கான், பர்வேலியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோத பயோமெட்ரிக் கையாளுதல் (biometric manipulation) அமைப்பை நடத்தி வந்துள்ளார்.

மோசடியாக ஆதார் தொடர்பான மாற்றங்களைச் செய்ய இவர் க்ளோன் செய்யப்பட்ட கைரேகைகள், கண் கருவிழி தரவுகள் (cloned fingerprints, iris data) மற்றும் அங்கீகரிக்கப்படாத மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார். வி.பி.என் (VPN) மென்பொருளைப் பயன்படுத்தி தனது செயல்பாட்டு இருப்பிடத்தை மறைத்துள்ளார்.

இதன் மூலம், அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையத்தின் செயல்பாடுகள் போலச் சிஸ்டத்தை ஏமாற்றியுள்ளார்.

தற்போது, போலீசார் இது தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM