கார்த்திகை தீபத்திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன - திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் உறுதி
சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் த
கார்த்திகை தீபத்திருவிழாவில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் உறுதி


சென்னை, 28 நவம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் தீபத்திருவிழாவின்போது கோவிலில் நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான இன்றைய(நவ 28) விசாரணையின் போது, திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பக்தர்கள் வசதிக்காக 4,764 சிறப்பு பேருந்துகள், வெளி மாநில பக்தர்களுக்காக 520 பேருந்துகளும், 16 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுகின்றன.

2,325 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏதுவாக, 24 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்; ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 19,815 கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக 130 கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,060 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி பி.பி.பாலாஜி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / vidya.b