Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 டிசம்பர் (ஹி.ச.)
புதுடெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு மண் அள்ளுதல், தரையைத் தோண்டுதல், குவியல்கள் அமைத்தல், கட்டுமானப்பணிகள் மற்றும் கட்டுமானங்களை இடித்தல் போன்றவை தடை செய்யப்பட்டு உள்ளன.
செங்கல் தொழில், சூடான கலவை ஆலைகள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டுத் தொழில்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அத்தியாவசிய தேவையை தவிர அனைத்து நடுத்தர மற்றும் கனரக சரக்கு டீசல் வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத்தை தவிர, டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்தக்கூடாது. திறந்த வெளியில் எதையும் எரிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தனியார் வாகனங்களில் மின்சாரம், சி.என்.ஜி. மற்றும் பி.எஸ்.-6 ரக கார்களை இயக்கலாம். மாணவர்கள் மற்றும் ஊழியர்களில் பாதி பேரை வீட்டில் இருந்து படிக்க, பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை மாதத்துக்கு 2 தடவை விசாரிப்போம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு கோர்ட்டு ஆலோசகர் அபராஜிதா சிங் ஆஜரானார்.
காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அவற்றை அதிகாரிகள் சரிவர அமல்படுத்துவது இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார். கோர்ட்டு உத்தரவிட்டால்தான் அவர்கள் அமல்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
அதையடுத்து, காற்று மாசு வழக்கு, நாளை (புதன்கிழமை) 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று தலைமை நீதிபதி கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM