Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 டிசம்பர் (ஹி.ச.)
காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல்
22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் மாற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு ராணுவங்கள் இடையே மோதல் வெடித்தது. பின்னர், இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் மோதல் முடிவுக்கு வந்தது.
இந்த மோதலின்போது பாகிஸ்தான் ராணுவம் ஏவிய அனைத்து டிரோன்களையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது.
அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ‘YIHA’ என்ற டிரோன் ஒன்றை முதல் முறையாக இந்திய ராணுவம் காட்சிக்கு வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ தளபதியின் இல்லத்தில் இந்த டிரோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த டிரோன் துருக்கியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டிரோனை சுமார் 10 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப்பில் இருக்கும் ஜலந்தர் பகுதியை நோக்கி கடந்த மே 10-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஏவியது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த டிரோனை அமிர்தசரஸ் அருகே சுட்டு வீழ்த்தியது.
கீழே விழுந்த டிரோனை இந்திய ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி, அதன் பாகங்களை ஒருங்கிணைத்து தற்போது காட்சிக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM