Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 டிசம்பர் (ஹி.ச.)
தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்.ஐ.ஆர்) மேற்கொண்டுள்ளது.
இந்த சிறப்புப் பணிகளில், குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் ஈடுபட்டனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களாகப் பெற்று வந்தனர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மேற்குவங்கம், கோவா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிசம்பர் 16) வெளியிடுகிறது. வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
பெயர் விடுபட்ட, இடம் பெயர்ந்த, போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற
19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது
Hindusthan Samachar / vidya.b