Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 டிசம்பர் (ஹி.ச.)
2012 ஆம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டுக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை யங் இந்தியன் லிமிடெட் கையகப்படுத்தியதில் சில காங்கிரஸ் தலைவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, அத்துடன் மறைந்த கட்சித் தலைவர்களான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியன் தனியார் நிறுவனம் ஆகியோர் மீது சதி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை சுமத்தியுள்ளது.
தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கையை எதிர்க்கும் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று
( டிசம்பர் 16 ) விசாரணைக்கு வந்தது.
அப்போது, காங்கிரஸுக்கு நன்கொடை அளித்தவர்கள் ஏமாற்றப்பட்டதாக அமலாக்கத் துறை வாதிட்டது.
கட்சிக்கு நன்கொடை அளித்த சிலருக்கு பின்னர் தேர்தல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியது.
மேலும், ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ். சீமா, காங்கிரஸ் கட்சி AJL-ஐ விற்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றும், மாறாக அது சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் அதைக் காப்பாற்றவே முயன்றது என்றும் வாதிட்டார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீதான அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்குப்பதிவு செய்யாமல் ECIR என அழைக்கப்படும் அமலாக்கத் துறை தகவல் அறிக்கையை மட்டும் பதிவு செய்து கொண்டு பணமோசடி வழக்கில் விசாரணையை தொடங்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam