Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 16 டிசம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் தேவசம்போர்டு தேவைக்கும், மின் விளக்குகள் அமைக்கவும் மற்றும் பிரசாதம் தயாரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு தேவசம்போர்டு சீசனில் மட்டும் ரூ.3.5 கோடி ரூபாய் செலுத்துகிறது. மாத பூஜைக்கு தனியாக செலுத்துகிறது.
இதனால் இந்தச் செலவை குறைக்கும் வகையில் சோலார் மின் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சோலார் மின்திட்டத்தை செயல்படுத்திய சியால் நிறுவனம் இதற்கான திட்ட அறிக்கையை வழங்கியுள்ளது. ஒரு வங்கி இதை ஸ்பான்சர் செய்யவும் முன் வந்துள்ளதாக தெரிகிறது.
எனினும் சபரிமலை பாதையில் மிகப் பழமையான மின்கம்பங்கள் உள்ளதால் அவற்றை மாற்றி புதிய மின்கம்பங்கள் நிறுவிய பின்னரே சோலார் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று மின்வாரியம் கூறி இருக்கிறது.
மின்பாதையை சரி செய்வதற்கு மட்டும் தேவசம் போர்டுக்கு ரூ.4.5 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 4.5 கி.மீ., துாரத்திற்கு மின் பாதையை சரி செய்ய வேண்டும், இதற்கும் ஸ்பான்சர் கிடைக்கும் பட்சத்தில் சோலார் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் தேவசம்போர்டு கருதுகிறது.
இங்கு சோலார் பேனல் பொருத்துவதற்கு போதுமான இட வசதி உள்ளதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அன்னதான மண்டபம், பக்தர்கள் தங்கும் கட்டடங்கள், பெரிய நடைப்பந்தல் போன்றவற்றின் மேல் சோலார் பேனல்கள் அமைக்க முடியும்.
முதலில் சபரிமலையில் இதை அமைத்த பின்னர், படிப்படியாக பம்பை, நிலக்கல்லிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM