ஜனவரி முதல் வாரம் கூடும் தமிழக சட்டசபை - பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்
சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.) வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்ட தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. தமிழக சட்டசபை ஜனவரி 5-ந் தேதி கூடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். முதல் நாளில் ஆ
ஜனவரி முதல் வாரம் கூடும் தமிழக சட்டசபை - பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்


சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.)

வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டசபையைக் கூட்ட தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. தமிழக சட்டசபை ஜனவரி 5-ந் தேதி கூடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும். அதன்பிறகு, மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக இடைக்க பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும்.

இது இடைக்கால பட்ஜெட் என்றாலும், தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட இருப்பதால் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டுக்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் இடைக்காலமாக தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும். 4 நாட்கள் இது நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாத இறுதியில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், அதற்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விடும்.

Hindusthan Samachar / vidya.b