டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - அலுவலகங்களில் சுழற்சி முறையில் பணி நேரங்களை அமல்படுத்த அரசு உத்தரவு
புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.) டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் , பிஎஸ்- 3 பெட்ரோல் ம
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - அலுவலகங்களில் சுழற்சி முறையில் பணி நேரங்களை அமல்படுத்த அரசு உத்தரவு


புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் , பிஎஸ்- 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் நான்கு சக்கர வாகனங்களும் பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக டெல்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் சுழற்சி முறையில் 50% ஊழியர்கள் மட்டுமே நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மீதியுள்ள 50% ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஒரே நேரத்தில் வந்து செல்வது அவசியமில்லை என்றும் வருகை மற்றும் புறப்படும் நேரங்கள் படிப்படியாகப் பிரிக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடைமுறை நாளை(டிசம்பர் 18) முதல் அமலுக்கு வருவதாக டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்களைப் பொருத்தவரை, அத்தியாவசிய மற்றும் அவசரப் பொதுச் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய, நிர்வாகச் செயலாளர்கள் தேவைக்கேற்ப அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ அலுவலகத்திற்கு அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் அலுவலகங்கள் சுழற்சி முறையில் பணி நேரங்களை அமல்படுத்த வேண்டும், வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b