Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 டிசம்பர் (ஹி.ச.)
‘ஜூலை ஒய்க்யோ மஞ்சோ’ என்ற தீவிரவாத அமைப்பு, டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை இன்று (டிசம்பர் 17) முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
வங்கதேசத்தின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ‘ஜூலை ஒய்க்யோ மஞ்சோ’ அறிவிப்பால் அங்கு பதற்றமான சூழநிலை உருவாகி உள்ளது.
இந்த போராட்ட அறிவிப்பை அடுத்து, பிற்பகல் 2 மணி முதல் தனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக டாக்காவில் உள்ள இந்திய விசா மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ரியாஸ் அமிதுல்லாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்குச் சென்ற ரியாஸ் அமிதுல்லாவிடம், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து முறையிடப்பட்டுள்ளது.
பின்னர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லா, வெளியுறவு அமைச்சகத்தால் அழைக்கப்பட்டார். அவரிடம், வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழல் குறித்து கடுமையான கவலைகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக, டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு எதிராக பாதுகாப்பற்றச் சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ள சில தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்களுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் தீவிரவாத சக்திகளின் தவறான சித்தரிப்பை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது. இந்த சம்பவங்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசு முழுமையான விசாரணையை நடத்தவில்லை என்பதோடு, உரிய ஆதாரங்களை இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இது துரதிருஷ்டவசமானது.
வங்கதேச விடுதலைப் போராட்டக் காலம் முதல் இந்தியா, வங்கதேச மக்களுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டுள்ளது. வங்கதேசத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். மேலும், வங்கதேசத்தில் அமைதியான முறையில், சுதந்திரமான, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய, நம்பகமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆழ்ந்த விருப்பம் கொண்டுள்ளோம்.
வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசாங்கம் தனது ராஜதந்திர கடமைகளுக்கு இணங்க, வங்கதேசத்தில் உள்ள தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b