Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று (டிசம்பர் 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக,நாம் தமிழர், அமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 10-கும் மேற்பட்ட கட்சிகளும், அமைப்பினரும் கலந்து கொண்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியதாவது,
சமூக நீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் திமுக சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விட்டது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக கடந்த 36 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும், மாநில அரசு எடுத்தாலும் நீதிமன்றங்கள் ரத்து செய்து விடும், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று 3 விதமான பொய்களை தமிழக முதலமைச்சர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒரு சாதிக்கான பிரச்சனை கிடையாது இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பிரச்சனை சமூக நீதி காண பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதியின் பெயரால் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் மேல் எழும்பி வருவதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். தற்போது வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது 95 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1931 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலே வழங்கப்பட்டு வருகிறது.
1931 இல் இந்தியாவின் மக்கள் தொகை 28 கோடி ஆனால் இன்று 146 கோடி மக்கள் தொகை உள்ளது. எனவே மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் தற்போது தமிழ்நாடு மக்களின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து தெரியவரும். தமிழ்நாட்டு மக்களில் யார் யாருக்கு கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் ஆகியவற்றில் தன்னிறைவு கிடைத்திருக்கிறது. இன்னும் யார் யாருக்கு கூடுதலாக தேவைப்படுகிறது என்ற உண்மையான புள்ளி விவரங்கள் தெரியவரும்.
பட்டியல மக்களுக்கு தமிழ்நாட்டில் 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில் மூன்று விழுக்காடு அருந்ததிய மக்களுக்கும்.. ஒரு விழுக்காடு பழங்குடியின மக்களுக்கும் வழங்கப்படுகிறது. பட்டியல் என சமுதாயத்திற்குள் 76 உட்பிரிவுகள் இருக்கிறது. அந்த உட்பிரிவில் உள்ள 76 சமுதாயங்களுக்கும் சமமான இட ஒதுக்கீடு கிடைக்கிறதா என்றால் இல்லை. பட்டியல் சமுதாயத்தில் 6 முதல் 8 சமுதாயங்கள் மட்டுமே 90 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள்.
இந்தியாவில் பீகார், கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து நடத்தி முடித்து விட்டன. ஆந்திரா, ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து வருகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பார்த்து கேட்கிறேன். உங்களுடைய ஆட்சிதானே கர்நாடகாவில் நடக்கிறது அவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது நீங்கள் ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்? திராவிட கழகம் ஆசிரியர் வீரமணியை கேட்கிறேன், வைகோ, திருமாவளவன் ஆகியோரையும் கேட்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதிகமாக பயன்பட போவது பட்டியல் சமுதாய மக்கள்தான் நீங்கள் ஏன் வாயை மூடி மௌனமாக இருக்கிறீர்கள்? தேர்தலுக்காக அமைதியாக இருக்கிறீர்களா?
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b