Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17 அன்று 'ஓய்வூதியதாரர் தினம்' கொண்டாடப்படுகிறது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் சமூகப் பங்களிப்பைக் கௌரவிக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ஓய்வூதியத் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி:
1982 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி, இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், ஓய்வூதியம் என்பது கருணைத் தொகையல்ல, அது ஊழியர்களின் உரிமை என்பதை இத்தீர்ப்பு நிலைநாட்டியது.
இந்த முக்கியத் தீர்ப்புக்காகப் பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திய மறைந்த டி.எஸ். நகரா நினைவாக, அவர் வெற்றி பெற்ற தினத்தை இந்தியா முழுவதும் ஓய்வூதியதாரர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
முக்கியத்துவம்:
ஓய்வூதியத் திட்டங்கள், ஊழியர்கள் தங்கள் பணி காலத்தில் உழைத்த உழைப்பிற்கான அங்கீகாரத்தையும், முதுமைக் காலத்தில் நிதிப் பாதுகாப்பையும் வழங்குகின்றன.
ஓய்வூதியதாரர் தினம், ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளை நினைவூட்டுகிறது மற்றும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்குத் தங்கள் இளமைக் காலத்தை அர்ப்பணித்த மூத்த குடிமக்களின் சேவையைப் பாராட்டும் வாய்ப்பை இத்தினம் வழங்குகிறது.
ஓய்வூதியதாரர் தினத்தில், பல அரசுத் துறைகள் ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்க்கும் முகாம்களை நடத்தி, அவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கின்றன.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாகவும், கண்ணியமாகவும் கழிப்பதை உறுதி செய்வதே இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும்.
Hindusthan Samachar / JANAKI RAM