Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 20 டிசம்பர் (ஹி.ச.)
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (டிசம்பர் 20) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் கூறியதாவது,
உலகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகார மையங்கள் கணிசமான மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளன. எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், எந்தவொரு நாடும் அனைத்து பிரச்சினைகளிலும் தனது விருப்பத்தை திணிக்க முடியாது.
தற்போது உலகம் நம்மை எப்படிப் பார்க்கிறது? சுருக்கமாகச் சொன்னால், முன்பை விட மிகவும் நேர்மறையாகவும், மிக கவனமாகவும் பார்க்கிறது. அதற்குக் காரணம், கணிசமாக மேம்பட்டுள்ள நமது தேசியப் பிம்பமும், நமக்கு கிடைத்த நற்பெயர்களும்தான்.
இன்றைய உலகில், இந்தியர்கள் உறுதியான தொழில் நெறிமுறைகளைக் கொண்டவர்களாகவும், தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்தவர்களாகவும், குடும்பத்தை மையமாகக் கொண்ட கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
வெளிநாடுகளில் நடைபெறும் உரையாடல்களில், நமது புலம்பெயர் இந்தியர்களைப் பற்றிய பாராட்டுகளையே நான் பெரும்பாலும் கேட்கிறேன். மேலும், தொழில் செய்வதற்கும், எளிமையாக வாழ்வதற்கும் ஏற்ற இடமாக இந்தியா மேம்பட்டு வருவதால், ஒரு தேசமாக, ஒரு சமூகமாக சர்வதேச அளவில் நம்மைப் பற்றிய
பழைய தவறான பிம்பங்கள் படிப்படியாகக் நீங்கி வருகின்றன.
நிச்சயமாக, நமது முன்னேற்றம் மற்றும் நவீனமயமாக்கல் பயணத்தில் நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதே சமயம், இந்தியா மீதான பிம்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். இந்தியா இன்று அதன் திறமையாலும், ஆற்றலாலும் வரையறுக்கப்படுகிறது. இவை அனைத்தும் நமது தேசிய அடையாளத்தை வடிவமைக்க உதவியுள்ளன.
இந்தியர்களாகிய நாம் உலகை எப்படி அணுகுகிறோம்? மீண்டும், நான் தெளிவாகச் சொல்வேன், அதிக நம்பிக்கையுடனும், அதிக திறமையுடனும் அணுகுகிறோம். ஆனால், கவனிக்கத்தக்க ஒரு வேறுபாடு உள்ளது. பெரும்பாலான நாடுகள் வர்த்தகம், முதலீடு அல்லது சேவைகள் எனப் பொருளாதார பரிவர்த்தனைகள் மூலம் உலகில் தங்கள் இருப்பை நிலைநிறுத்தியுள்ளன. இருப்பினும், நமது தனித்துவம் என்பது நம்முடைய மனித வளம்தான்.
வருமானம் உயர்ந்து தேவைகள் அதிகரிக்கும்போது, பலவிதமான சமூக-பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. நமக்கு அதிக பொறியாளர்கள், மருத்துவர்கள், மேலாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களும் தேவைப்படுவார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் நமது உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இருமடங்காக பெருகியுள்ளது. மேலும் வளர்ச்சிக்கும், கட்டுப்பாடான முன்னேற்றத்திற்கும் இன்னும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b