Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)
தென் மாவட்டங்களுக்கு செல்ல பிரதான பாதையாக விளங்கும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புதிய ரயில் பாதை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பியது.
தற்போது, இந்த திட்டத்தை செயல்படுத்த ரயில்வே வாரியம் 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பொதுமக்களின் தேவையை கருத்தில் வைத்து, பல்வேறு மாநில அரசுகள் ரயில்வேயுடன் இணைந்து திட்டப்பணிகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில், தமிழக அரசின் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்கு வரத்து ஆணையம், இந்த திட்டப்பணியை மேற்கொள்ள உள்ளது.
இதற்கு டி.பி.ஆர்., எனும் விரிவான திட்ட அறிக்கைக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், இந்த திட்டப்பணிகள் வேகமெடுக்கும்.
ஏற்கனவே, போதிய நிலம் கையகப்படுத்துவது போன்ற பணிகளை துவக்கி உள்ளோம். இந்த புதிய பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில்களை இயக்க முடியும். அதுபோல், ரயில்களின் வேகமும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b