Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச.)
சுயநலமற்ற சேவை புரியும் செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின்படி சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடி வரும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவது, ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைப்பது என அலைக்கழிக்கும் திமுக அரசின் அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அருவருப்புடன் சிலர் விலகிச் செல்லும் நோயாளிகளையும் மனிதநேயத்துடன் முகம் சுழிக்காது தாயுள்ளத்துடன் பேணி வரும் செவிலியர்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகளைப் போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? நூற்றுக்கணக்கான செவிலியப் பெண்களைப் பசி, பட்டினியுடன் அடிப்படை வசதிகளின்றி ஒரு மண்டபத்தில் அடைத்து வைப்பது தான் திமுக அரசின் 'வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கான' இலக்கணமா? ஆட்சியே முடியப்போகிறது, ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என எந்தப் பிரிவினர் கேட்டாலும் அவர்களின் குரல்வளையை நெரிப்பது என்ன விதமான பாசிச மனநிலை?
குறிப்பாக, பேச்சு வார்த்தைக்காக வரவழைத்த சுகாதாரத்துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்கள் தங்களை மிரட்டும் தொனியில் பேசியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவிப்பது திமுக தலைவர்களுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது.
ஐந்தறிவு கொண்ட அணிலுக்கெல்லாம் பாவம் பார்க்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு, உழைக்கும் வர்க்கத்தினர் மீது கொஞ்சம் கூட இரக்கமில்லை என்பது விசித்திரமாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்தவுடன் அதே மக்களின் மீது அடக்குமுறையை ஏவும் திமுக எனும் ஏமாற்றுக்கார கட்சிக்கு மீண்டும் அரியணை என்பது இனி கனவிலும் கிட்டாது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ