வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்
சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச) ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை – வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன
Ttv


Tw


சென்னை, 20 டிசம்பர் (ஹி.ச)

ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை – வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பணி வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு உள்ளான சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 50வது வார்டு பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் திரு ரவிக்குமார் அவர்கள் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தூய்மைப் பணியாளர் ஒருவர் மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்திலும், கொரோனோ போன்ற பெருந்தொற்று காலத்திலும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரையும், மாநகரின் சுகாதாரத்தையும் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல் ஏற்றுக் கொள்ளமுடியாதது .

எனவே, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உரிய ஊதியமின்றியும், வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ