Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 டிசம்பர் (ஹி.ச)
இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று
(டிசம்பர் 20) காலையில் எதிரில் இருப்பவர்கள் தெரியாதபடி பனிமூட்டம் நீடித்தது.
மேலும், பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விமான நிலைய வட்டாரங்களின்படி, காட்சித் தெளிவின்மை காரணமாக, இன்று திட்டமிடப்பட்ட 129 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதில் 66 விமானங்களின் வருகை மற்றும் 63 விமானங்களின் புறப்பாடுகள் அடங்கும். மேலும் பல விமானங்கள் தாமதமும் ஏற்பட்டது.
அதேபோல டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் காட்சித் தெளிவின்மை நிலவியது. நகரத்தின் பெரும் பகுதிகளை அடர்ந்த பனிமூட்டப் படலங்கள் சூழ்ந்திருந்தது.
டெல்லியில் காலை 8.30 மணி வரை பதிவு செய்யப்பட்ட காட்சித் தெளிவின்மை சஃப்தர்ஜங்கில் 200 மீட்டராகவும், பாலம் பகுதியில் 350 மீட்டராகவும் இருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு அடர்ந்த முதல் மிக அடர்ந்த பனிமூட்டம் குறித்து ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் கடுமையாக இருக்கும் என்றும், இதனால் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடர்ந்த பனிமூட்டத்துடன், டெல்லியில் காற்று மாசுபாடு அளவு ‘மிகவும் மோசமான’ முதல் ‘கடுமையான’ பிரிவுகளில் நீடித்தது. காலை 7 மணி நிலவரப்படி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 376 ஆக இருந்தது.
ஐடிஓ (429), விவேக் விஹார் (425), ஆனந்த் விஹார் (423), ஜஹாங்கீர்புரி (420), நேரு நகர் (418) மற்றும் வஜிர்பூர் (417) உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியுள்ளது.
பஞ்சாபி பாக் 413, முண்ட்கா 412, ஓக்லா இரண்டாம் கட்டம் 408, அசோக் விஹார் மற்றும் ரோஹினி தலா 407 எனப் பதிவாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b