Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 டிசம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு மக்களுக்கு அடிப்படை வசதிகளை சரி செய்யக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் துரைப்பாக்கம் , கண்ணகி நகர் , எழில் நகல் , சுனாமி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளிலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புகளில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
மேலும், கட்டிடங்கள் புனரமைப்பு சுத்தமான குடிநீர் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது உள்ளிட்ட 10 பிரதான கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பேசுகையில் ,
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தினம் தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் , ஆனால் அரசு இவை எதையும் சரி செய்யாமல் தொடர்ந்து அலட்சியப் போக்கில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் , அரசு இந்த மக்களின் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 10 கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து மக்களிடமும் கையெழுத்து பெற்று அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
மேலும் இதனால் சுமார் 50,000 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், லட்சக்கணக்கான பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ