Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 டிசம்பர் (ஹி.ச)
இந்தியா முழுதும், 'நீட்' நுழைவுத்தேர்வு வாயிலாகவே எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 'பர்சன்டைல்' முறையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதில், பர்சன்டைல் என்பது, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை குறிக்கும். உதாரணமாக ஒரு மாணவர் 70 பர்சன்டைல் பெற்றுள்ளார் என்றால், அவரை விட 70 சதவீத மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று அர்த்தம்.
இது, 'கட் - ஆப்' மதிப்பெண்களுக்கும், மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கை பெறுவதற்கும் ஒரு அளவுகோலாக பயன்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இயங்கி வரும் 10 தனியார் பல் மருத்துவக் கல்லுாரிகள், கடந்த 2016 - 17ல் பல் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கையின்போது, பர்சன்டைலில் முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.
அதாவது, நீட் தேர்வின் பர்சன்டைலில் 10 சதவீதத்தையும், பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச பர்சன்டைலில் 5 சதவீதத்தையும் அந்த தனியார் கல்லுாரிகள் குறைத்தன.
இதன் மூலம், பல் மருத்துவப் படிப்புகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இது, இந்திய பல் மருத்துவ கவுன்சில் வகுத்த குறைந்தபட்ச தகுதியை விட குறைவு.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய் பிஷ்னோய் மற்றும் ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில், மாணவர் சேர்க்கை முறைகளில் அப்பட்டமாக விதிகள் மீறப்பட்டு இருப்பது கண்கூடாக தெரிகிறது. பல் மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசின் அனுமதியை பெறாமல், நீட் பர்சன்டைல் மதிப்பெண்ணில் 10 சதவீதத்தையும், பல் மருத்துவ படிப்புக்கான குறைந்தபட்ச பர்சன்டைலில் 5 சதவீதத்தையும், ராஜஸ்தான் அரசு குறைத்துள்ளது.
மாநில அரசின் தளர்வுக்கேற்ப தனியார் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளன. இந்த விதிமீறல் கடுமையான தண்டனைக்குரியது. எனவே, சம்பந்தப்பட்ட 10 கல்லுாரிகளுக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிடுகிறோம்.
விதிமீறிய தனியார் கல்லுாரிகள் மீது விதிக்கப்பட்ட அபராதம் என்பது கடுமையான நடவடிக்கை மட்டுமல்ல, எதிர்காலத்தில் மாணவர் சேர்க்கையின்போது விதிமீறினால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதற்கான எச்சரிக்கை.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பர்சன்டைல் தளர்வின் கீழ் பல் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்ட 59 மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, இவ்வழக்கில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. அதே சமயம், இயற்கை பேரிடர்கள், தொற்று நோய் பரவல் போன்ற இக்கட்டான சூழல்களில், அரசு அழைத்தால் பொது சேவைக்கு வர வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பல் மருத்துவப் படிப்புகளில் விதிகளை பின்பற்ற தவறியதற்காகவும், அனுமதி பெறாமல் பர்சன்டைல் தளர்வு வழங்கியதற்காகவும், ராஜஸ்தான் மாநில அரசுக்கு, நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
உச்ச நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை, ராஜஸ்தான் மாநில சட்ட சேவை ஆணையத்தில் எட்டு வாரத்திற்குள் செலுத்த வேண்டும், அதை முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் உள்ளிட்ட தொண்டு மையங்களுக்கு பிரித்து தரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b