Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 டிசம்பர் (ஹி.ச.)
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து குடியேற்ற விதிகளையும், விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார்.
குறிப்பாக, வெளிநாட்டு பணியாளர்களால், அமெரிக்கர்கள் வேலை இழப்பதாகக் கூறி, எச்1பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை விதித்தார்.
அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்.
மேலும் , எச்1பி மற்றும் எச்-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளங்களை கட்டாய ஆய்வுக்கு உட்படுத்தும் விதியையும் அமல்படுத்தினார்.
இதன் காரணமாக, அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துணைத் துாதரகங்களில் விசா நேர்முகத் தேர்வுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
விசா நேர்காணல்கள் தாமதமானதால் இந்திய தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். புதிய விதிமுறைகள் காரணமாக, விசா நியமனங்கள் திடீரென ரத்து மற்றும் பல மாதங்கள் தாமதங்கள் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், எச்-1பி மற்றும் எச்-4 விசாக்களுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களின் நேர்காணல் திடீரென பல மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மறு திட்டமிடப்பட்ட தேதிகள் 2026ம் ஆண்டு பாதிக்கும் அல்லது 2027ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகின்றன.
இதனால் அவர்கள் இந்தியாவில் சிக்கித் தவித்து, அவர்களின் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இருந்து விண்ணப்பித்து இருந்த ஏராளமானோர் நேர்காணல் ரத்து காரணமாக, பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல இந்திய ஊழியர்கள் 'எச்1பி' விசா அனுமதிக்காக குடும்பத்தினரை அமெரிக்காவில் விட்டுவிட்டு விடுமுறை எடுத்து நாடு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது அவர்களால் அமெரிக்காவுக்கு செல்ல முடியவில்லை.
அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணியாற்றுபவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்களே. இதனால், இந்த நெருக்கடி இந்திய ஊழியர்களையே அதிகம் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM